கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்களை வெட்டி எடுக்கும் ஒப்பந்தம் கோருவோருக்கு 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலும், 10 ஏக்கர் உள்ள குவாரிகளுக்கு 20 ஆண்டுகள் வரையிலும், 10 ஏக்கருக்கு மேல் உள்ள குவாரிகளுக்கு 30 ஆண்டுகள் வரையிலும் கால நீட்டிப்பு வழங்கி அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே உரிமம் பெற்று இயங்கிவரும் கல்குவாரிகளில், பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிகமான பரப்பளவில், அதிகமான ஆழத்தில் முறைகேடாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றை முறையாகக் கண்காணித்து, அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுப்பதில்லை. மாறாகக் கனிம வளக்கொள்ளையைத் தடுக்க முயலும் அரசு அதிகாரிகள், புகார் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், கனிமவளக் கொள்ளையர்களால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவதை திமுக அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. மாறாகக் கனிமவளக்கொள்ளை குறித்துப் புகார் தெரிவிக்கும் நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை, 25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து அறிவித்துள்ளது கனிம வளக்கொள்ளை மேலும் பன்மடங்கு அளவிற்கு அதிகரிக்கவே வழிவகுக்கும்.
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமல்ல; நமக்குப் பின்வரும் வருங்காலத் தலைமுறைக்கானது. அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளிக்க வேண்டியது நம்முடைய முழுமுதற் கடமையாகும். மீண்டும் நம்மால் உருவாக்கவே முடியாத இயற்கையின் அருட்கொடையாம் மலை, மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வெட்டி எடுக்க அனுமதித்து அழித்தொழிக்கப்படுவதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் வருங்காலத் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்று நிலம் தன் இயல்பான தன்மையை இழந்தால் வறண்ட பாலை நிலமாகும் என்பதை எச்சரிக்கும் விதமாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகார காப்பியம் வலிதோய்ந்து பாடுகிறது.
மலை, மணல், ஆறு, அருவி, கடல், காடு, காற்று, நிலம், நீர் என்று நாம் வாழும் பூமியின் எல்லா வளங்களையும் கொள்ளைப்போக அனுமதித்து, முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டு நமக்குப் பின்வரும் தலைமுறைக்கு எதை வைத்துவிட்டுப் போகப்போகிறோம்? சுற்றுச்சூழலை நாசமாக்கி வாழத் தகுதியற்ற நிலமாக பூமியை மாற்றிவிட்டு எங்கே நம் சந்ததிகளை வாழவைக்கப்போகிறோம்? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு?
ஆகவே, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் கல் குவாரிகளுக்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.