தவெக ஆட்சி கோவையின் சிறுவாணி நீரைப்போல தூய்மையானதாக அமையும்: விஜய்!

தவெக ஆட்சி சிறுவாணி நீரைப்போல தூய்மையானதாக இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்.

தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான 2-ம் நாள் பயிற்சிப் பட்டறை கோவை எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது:-

அண்ணாவின் உரையை மேற்கோள் காட்டிய விஜய், மக்களுடன் இருந்தே மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். அண்ணா உரையைப் புரிந்து கொண்டு தவெகவினர் செயல்பட வேண்டும் என விஜய் பேசினார். இந்தக் கூட்டத்தில் விஜய் மேலும் கூறியதாவது:-

இது வாக்கிற்காக மட்டும் நடத்தப்படும் கூட்டம் இல்லை.. ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் தொடங்கப்பட்ட கட்சி இல்லை.. சமரசம் என்ற பேச்சிற்கே இங்கே இடம் இல்லை. மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயங்க மாட்டோம். அண்ணாவை நினைவில் வைத்து கொள்ளுங்கள் நம்முடைய ஆட்சி அமையும் போது அது சுத்தமான க்ளீன் அரசாக இருக்கும். நமது ஆட்சியில் கரப்ஷன் இருக்காது, குற்றவாளிகளும் இருக்க மாட்டார்கள். இதனால் நமது பூத் லெவல் ஏஜெண்டுகள் தைரியமாக மக்களிடம் சென்று பேசுங்கள். பூத் ஏஜெண்டுகள் மக்களிடம் செல்லும்போது, அண்ணா சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அண்ணா சொன்னதை நான் இங்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.. மக்களிடம் செல்.. மக்களிடம் இருந்து கற்றுக்கொள்.. மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு.. மக்களை நேசி.. மக்களுக்காகச் சேவை செய் என்றார் அண்ணா. அதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.. கோவை ஊர் சிறுவாணித் தண்ணீரைப் போல் சுத்தமான ஒரு ஆட்சியை அமைக்க முடியும்.. இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், தவெக ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான, நிர்வாகம் செய்யக் கூடிய ஆட்சியாக அமையும். இதனால் நாம் ஒவ்வொருவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பூத்திற்கு வந்து வாக்கு செலுத்துவோருக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை. குடும்பம், குடும்பமாகக் கோவிலுக்குச் செல்வார்கள்.. பண்டிகை கொண்டாடுவார்கள்.. அதுபோல நமக்காகக் குடும்பமாக வந்து ஓட்டுப் போடும் மக்களுக்காகவும் அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் தவெக என்பது வழக்கமான கட்சி இல்லை. அது ஒரு விடுதலை இயக்கம் என்பது மற்றவர்களுக்குத் தெரியும். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்கள் செயல்பாடுகள் மிகவும் முக்கியம். அதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். மக்களிடம் சென்று பேசுங்கள்.. அனைவரும் உறுதியோடு இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, நேற்று மாலை நிகழ்ச்சி நடைபெற்ற கல்லூரிக்கு, தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பிரச்சார வேன் மூலம் ரோடு ஷோ நடத்தினார் விஜய். சாலையின் இருபுறத்திலும் கூடியிருந்த ஏராளமானோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதிக வாகனங்கள் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக கல்லூரி வளாகத்தை சென்றடைய 2 மணி நேரத்துக்கு மேலானது. முதல் நாள் நிகழ்வில் பிரச்சார வாகனத்தின் கதவு தொண்டர்கள் கூட்டத்தால் சேதமடைந்ததால் காரில் சென்றார். இரண்டாம் நாள் நிகழ்வில் வாகனத்தின் கதவு சரிசெய்யப்பட்டதால், அதில் பயணித்தார்.