தமிழ்நாட்டுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; ஆகையால் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா மாநில அரசு மீண்டும் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை நூற்றாண்டுகளைக் கடந்தும் வலுவாகவே உள்ளது. முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான, கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. ஆனால் கேரளா அரசுகள் காலந்தோறும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது; முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்; முல்லைப் பெரியாறு அணையால் கேரளா அழிந்துவிடும்; முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரளாவே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற பல்லவியை பாடி வருகிறது. கேரளா அரசியல்வாதிகள்தான் என்றில்லை.. கேரளா திரைப்படங்களும் இதே லாவணிக் கச்சேரியைத்தான் பாடி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்திலும் இதே ஒப்பாரியையே கேரளா முன்வைத்து வருகிறது. ஆனாலும் உச்சநீதிமன்றம், எத்தனையோ குழுக்கள் அமைத்து ஆராய்ந்து பார்த்தாகிவிட்டது.. அத்தனை குழுக்களுமே முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்கின்றன. இந்த ஒரு நூற்றாண்டில் எத்தனையோ நிலநடுக்கம், புயல், மழை வந்த போதும் அவற்றை எதிர்கொள்ளக் கூடியதாக வலுவான நிலையில்தான் முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது என கேரளாவின் முகத்தில் அறைந்தது போல பதில் சொல்லிவிட்டது. இந்த பின்னணியில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக மேற்பார்வைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதிலும், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற லாவணி பல்லவியையே கேரளா மாநில அரசு பாடியிருக்கிறது.