டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு: சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினார். இதனையடுத்து, நீதிபதி விஜயா, வரும் மே 8, 2025 அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சீமான், டிஐஜி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நான்கில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. முன்னதாக, நீதிபதி விஜயா, சீமான் ஏப்ரல் 8 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அன்று சீமான் மற்றும் டிஐஜி வருண்குமார் இருவரும் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சீமான் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை நீதிபதியிடம் நேரில் சமர்ப்பித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மே 8 அன்று சீமான் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் அளித்த பேட்டியில், பல்வேறு விசாரணைகளைத் தொடர்ந்து, 24/03/2025 அன்று நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், நீதிமன்றம் 28/04/2025 அன்று உத்தரவு பிறப்பித்தது. “நீதிமன்றம் எங்கள் தரப்பு விசாரணையை கருணையோடு கேட்டு, சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 351, 356 மற்றும் பெண்களுக்கு எதிரான ஆபாச உள்ளடக்கத்தைத் தூண்டும் பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது” என்று கூறினார்.

சீமான் தொடர்ந்து விசாரணைகளில் ஆஜராகவில்லை என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார். “நிறைய விசாரணைகள் நடந்தாலும், ஒரே ஒரு வாய்தாவுக்கு மட்டும், நீதிமன்றம் கடுமையாக நடந்துகொண்டதால், வேறு வழியின்றி சீமான் ஆஜரானார். இந்த வாய்தாவிலும் அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். ஆஜராகாததற்கான காரணம் தெரியவில்லை” என்று கூறினார். மேலும், “சமாதான பேச்சுவார்த்தைக்கு எந்த முன்னோட்டமும் இல்லை. நாங்கள் சட்டரீதியாகவே இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.