தேச விரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்பதில் என்ன தவறு? தனிநபர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக புகார் தெரிவித்தால் அது குறித்து விசாரணை நடத்த தயார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் சூர்ய காந்த், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது, பெகாசஸ் தொடர்பான அறிக்கைகளில் தேசப் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் இடம் பெற்றிருந்தால் அவற்றைப் பகிரங்கப்படுத்தமாட்டோம் என்றனர் நீதிபதிகள். அத்துடன், மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவேதி வாதிடுகையில், பெகாசஸ் மூலம் தனிநபர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், அதில் என்ன தவறு? நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதில் என்ன தவறு உள்ளது? அதில் எந்த தவறுமே இல்லை என்றனர். மேலும், அரசின் கண்காணிப்பில் இருந்து தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக தற்போதைய சூழ்நிலையில் (பகல்காம் தாக்குதல் சூழலில்) தேசத்தின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றார் நீதிபதி கோட்டீஸ்வர் சிங்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பயங்கரவாதிகளுக்கு எந்த ஒரு தனி உரிமையும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டினார். இன்றைய விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஷ்யாம் திவான், தினேஷ் திவேதி ஆகியோர், பெகாசஸ் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான இந்த பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையில், தேசப்பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் இடம் பெற்றிருந்தால் அதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்றனர் நீதிபதிகள். இன்றைய விசாரணையின் போது, பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் யார் யாருடைய செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டன என மனுதாரர்களின் பெயர்களை உச்சநீதிமன்றம் அமைக்க பெகாசஸ் தொழில்நுட்ப குழுவிடம் கொடுக்க உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் தனிநபர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது உறுதியானால் அது குறித்து ஆராயப்படும் என்றனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.