‘காலனி’ என்ற சொல் நீக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி!

தமிழ்நாட்டின் ஆதி குடிமக்களான ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிகளை இழிவாகக் குறிப்பிடும் ‘காலனி’ என்ற சொல் நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவித்தார்.

தமிழ்நாடு முதல்வரின் இந்த அறிவிப்பை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளில், இது ஒரு போனஸ் மகிழ்ச்சி அறிவிப்பாகும். எப்படி என்றால், இதுவரையில், அந்த வார்த்தையை, ஒடுக்குமிடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வைத்திருந்தார்கள். புரட்சிக்கவிஞர் அவர்கள் நம்முடைய இயக்கத்தினுடைய நோக்கம், வாழ்வின் நோக்கம் இரண்டு என்றார். ஒன்று, ஜாதி ஒழிப்பு; இரண்டாவது, தமிழ் வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழ் வளர்க்கின்ற அதே நேரத்தில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததைப்போல, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ”இனிமேல் காலனி என்ற சொல் இருக்கக்கூடாது” என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

தொடக்கத்திலிருந்தே, ஆதிதிராவிட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு வீடு கட்டிக் கொடுத்தால்கூட, அதனை ஒதுக்குப் புறத்திலே கட்டிக் கொடுக்கக் கூடாது; எல்லோரும் வசிக்கக்கூடிய இடத்தில் இருக்கவேண்டும் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையின் வெளிப்பாடு தான், நாடெங்கும் கலைஞர் அவர்களாலே உருவாக்கப்பட்ட ”பெரியார் நினைவு சமத்துவபுரம்” என்ற ஜாதி ஒழிப்பாகும். அதிலே மேலும் ஒரு கூடுதல் (Addition) என்று சொல்லக்கூடிய அளவிற்கு நமது முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. அதற்காக முதலமைச்சர் அவர்களைப் பாராட்டுகிறோம், நன்றி செலுத்துகிறோம், வாழ்த்துகிறோம்! காலனிகள் இல்லை – மனிதர்கள் வசிக்கக்கூடிய குடியிருப்புகள் மட்டுமே இனி உண்டு. இதுதான் திராவிடத்தின் சாதனை! வெல்லட்டும் திராவிடம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.