ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!

கண்ணகி, முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடலூர் மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி- முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று(நேற்று) உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்துள்ளது. 22 ஆண்டுகள் கழித்து அந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இதுபோன்ற ஆணவக் கொலைகள் இனிமேல் நடக்காமல் தடுப்பதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கண்ணகியும் முருகேசனும் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டில், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனையும், கண்ணகியின் தந்தை உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

2022 ஆம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றம் மருதுபாண்டியனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, அவரது தந்தை உட்பட ஒன்பது பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில்தான் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்தியதோடு ஆணவக் கொலை செய்யப்பட்ட முருகேசனின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம்.

கண்ணகி முருகேசன் படுகொலைக்கு முன்னர் ஆணவப் படுகொலை என்பது தமிழ்நாட்டில் அவ்வளவாக அறியப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அது அதிகரித்து வருகிறது. இந்தப் புதுவிதமான வன்கொலையைத் தடுக்க வேண்டியது சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை வைத்துள்ள மாநில அரசுகளின் கடமையாகும்.

“சக்தி வாஹினி -எதிர்- இந்திய ஒன்றிய அரசு” – என்ற வழக்கில் 2018 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டுமெனத் தீர்ப்பளித்துள்ளது. ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட அந்த சட்டத்தை மத்திய அரசோ அல்லது தமிழ்நாடு மாநில அரசோ இயற்றவில்லை என்பது கவலையளிக்கிறது. எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் அந்த சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமெனத் தமிழ்நாடு மாநில அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.