தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களையும் அகற்றக் கோரும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மேல்முறையீடு செய்துள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு பெற்ற அரசியல் கட்சி. எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.
பட்டியலின, மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள எங்களது கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எங்களது கட்சி கொடி கம்பங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு இன்று விசாரித்து, விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தது.