சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அடுத்தாண்டு மே மாதம் தான் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், இப்போது தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்திவிட்டன. தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே இங்கு அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. இதற்கிடையே சட்டசபைத் தேர்தலில் திமுக வியூகம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எப்போதும் மாதம் ஒரு முறையாவது தனது தொகுதியான கொளத்தூருக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நேற்று சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். சட்டசபைத் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அடுத்த தேர்தலில் திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்” என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், திமுக அரசு மக்கள் வரிப் பணத்தைச் சூறையாடுவதாக பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அது குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், “அவர்களுக்கு வேற வேலை இல்லை.. அதனால் இப்படித் தான் பேசிக் கொண்டு இருப்பார்” என்றார்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறையும் நிலையில், மூன்றாவது குழந்தையைப் பெறும் குடும்பத்தினருக்குச் சலுகைகள் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை திமுக எம்எல்ஏ பர்கூர் மதியழகன் நேற்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அதுபோல ஊக்கத்தொகை அறிவிக்கும் திட்டம் தமிழக அரசுக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “மக்கள் தொகை சரிவால் அதற்கு அவசியம் ஏற்படலாம்.. அதேநேரம் 3வது குழந்தை என்பது கட்டாயம் இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். மேலும், திமுக சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை எப்போதே தீவிரப்படுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசியல் களம் தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தலில் பல முனைப் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தனது கூட்டணியை அப்படியே வைத்திருக்கிறது. மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜக உடன் தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது. மேலும், விஜய்யும் தனது தவெக தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க முயன்று வருகிறார். இது தவிரச் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்தாண்டு தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே தேர்தல் பணிகளை இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளது.