மே தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!

“வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என்று மே தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தும் வண்ணம், உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த `மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் `மே’ தினமாகும்.

“வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி” என்று எம்.ஜி.ஆர், மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கிய கருத்துகளை என்றும் உள்ளத்தில் பதிய வைத்து, உழைப்பின் மேன்மையினை இந்த இனிய `மே’ தின திருநாளில் போற்றி பெருமிதம் கொள்வோம்.

உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில், எனது இதயமார்ந்த `மே’ தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:-

வருடத்தின் 365 நாள்களில் ஒரு சில நாள்களே உலகம் முழுமையும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான நாள்கள் ஆகும். அத்தகைய திருநாள்களில் ஒன்றுதான் ‘மே’ திங்கள் முதல் நாள். ‘தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்’ என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை – பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர” என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்க, பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறி, உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும்.

சிகாகோ நகரில் வைக்கோல் சந்தைச் சதுக்கத்தில் திரண்ட தொழிலாளர்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறைக் கொடுமைகளைப் புறங்கண்டு – உரங்கொண்டு போராடிய வீர வரலாற்றை நினைவுகூர்ந்திடும் நாள் இந்நாள்.தொழிலாளர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஹே மார்க்கட் தியாகிகளுக்கு இந்நாளில் வீர வணக்கம் செலுத்துவோம்!

காலம் காலமாகப் பாரம்பரியமாக வசந்தகால விழாக்கள் கொண்டாடப்படும் நாளாக இருந்த மே முதல் நாள், 1899-ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு சோசலிச மன்றத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.1990 ஏப்ரல் 30 ஆம் நாள் அன்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் மே முதல் நாளை மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று நான் முன் வைத்த கோரிக்கையை அன்றைய பிரதமர் வி.பி.சிங் ஏற்றுக்கொண்டு மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார்.

மனிதகுல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள்.தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயமார்ந்த மே நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:-

உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14 ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.

இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள் உழைக்கும் மக்கள் தான். உலகின் ஆக்கும் சக்தி தொழிலாளர்கள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். உழைக்கும் மக்கள் இல்லாவிட்டால் இந்த உலகம், இந்த மாநிலம் இயங்காது. இதற்கு காரணமான தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆனால், உழைக்கும் மக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பது தான் உண்மை. அரசுத் துறைகளில் நிலையான பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக ஒழிக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையிலும், குத்தகை அடிப்படையிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை.

ஒவ்வொரு நாளும் மே முதல் நாளில் தொழிலாளர்கள் நாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்பது தான். இதை மனதில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக போராடுவதற்கு இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

உலகத்தை உயர்த்துவதற்காக உழைப்பவர்களை போற்றும் மே நாளைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள பாட்டாளிகளுக்கு தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.

உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி. ஆனால், களச்சூழல் அத்தகையதாக இல்லை. உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது; பெரு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் நிலை மட்டும் மாறவில்லை. அவர்கள் இன்னும் சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். இன்னும் கேட்டால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியத் தேவை 19 ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிகத் தேவை இன்றைக்கு இருக்கிறது. உலகம் பல்வேறு தளைகளிலிருந்து விடுதலை பெற்று வரும் நிலையில் தொழிலாளர்களின் விலங்கு மட்டும் உடையவில்லை.

உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவது தான் உண்மையான சமூகநீதியாகும். நாட்டின் வளர்ச்சியாக இருந்தாலும், நிறுவனங்களின் வளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு அடித்தளமாக திகழ்பவர்கள் தொழிலாளர்கள் தான். அவர்கள் வலிமையாக இல்லாவிட்டால், அவர்களை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட எந்த சாம்ராஜ்யமும் சரிந்து விடும். இதை உணர்ந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணிக்காலம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தும் வழங்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் 136 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்பட்டது போன்ற போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க தொழிலாளர்கள் அனைவரும் தயாராவோம் என்று கூறி, மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை:-

கடந்த 139 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே 1 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தனர். நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பாஜக. அரசு நிறைவேற்றியுள்ளது. பாஜகவின் தொழிலாளர் விரோத போக்கு இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார தேக்க நிலையினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உண்டு. ஆனால், நிவாரணத் தொகை வழங்காமல் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில், நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறது.

எனவே பணமதிப்பிழப்பு, பொருத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், பொருளாதார பேரழிவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்:-

கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம் சிந்திய, உயிரை இழந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக வரையறை செய்யப்பட்ட அடிப்படையில், அவர்கள் 8 மணி நேரம் வேலை செய்திருந்தாலும், உற்பத்தி உலக அளவில் பெருகியுள்ளது. உற்பத்தி பெருக்கத்திற்கு தொழிலாளர்களும், அவர்களது நவீன கண்டு பிடிப்புகளும் பேருதவி செய்துள்ளன.. இதை முதலாளிகளும் முதலாளித்துவமும் மறுக்க முடியாது. இத்தகைய கண்டுபிடிப்புகளையும், உற்பத்தி பெருக்கத்தையும் தனது லாபத்திற்கும், மூலதன பெருக்கத்திற்கும் பயன்படுத்தி கொண்ட முதலாளித்துவம், தொழிலாளர்களை மென் மேலும் சுரண்டுகிற வகையில், சட்டங்களை திருத்தி, உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது, உழைக்கும் பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கி கூடுதல் உழைப்பைச் சுரண்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

8 மணி நேர வேலை என்பதை, உற்பத்தி பெருக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபோ போன்ற நவீன இயந்திரங்களின் வளர்ச்சி காரணமாக வேலை நேரத்தை குறைக்க ஒன்றிய பாஜக ஆட்சியை வலியுறுத்துவோம். அதேபோல் ஒப்பந்தம், பயிற்சி உள்ளிட்ட தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலுவான போராட்டங்களை முன்னெடுக்கவும் வேண்டும்.

எந்தவித சமூக பாதுகாப்பும் அற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளான, ஓய்வூதியம், மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்வதை வலியுறுத்திய போராட்டங்கள் தீவிரமாவதை உறுதி செய்வோம்.

ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்தி, அதை அமலாக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பாஜக ஆட்சியாளர்களின் முதலாளித்துவ கொள்ளை லாபத்திற்கு உதவிடும் சட்டத் திருத்தங்களை முறியடிப்பது மே தின சபதமாக அமையட்டும். அதற்காக மே 20 அன்று நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம். ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு முன் தொழிற்சங்கங்களும், இதர வெகுமக்கள் அமைப்புகளும் நடத்த திட்டமிட்டுள்ள மறியல் போராட்டங்களை பேரெழுச்சியுடன் நடத்திடுவோம்.

வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருப்பதை, போராட்டங்களே தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்து, போராடுவோம், முன்னேறுவோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் மே தின தொழிலாளர் பேரணி பொதுக்கூட்டங்கள் சிறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.