டெல்லியில் நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் இணைந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த 12-ம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றபின் டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், அங்கு முகாமிட்டு தலைமை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்புகளின்போது, வரவிருக்கும் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் பாஜக தேசிய தலைமை தீவிரமாக இருப்பதை நயினாரிடம் மூத்த நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக, அதிமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதேபோன்ற கருத்துகளுடன், திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடியும் அறிவுறுத்தல்கள் வழங்கியதாகத் தெரிகிறது.

மேலும் காஷ்மீர் பகல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரூரைச் சேர்ந்த பரமேஸ்வரனையும் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் தமிழகம் திரும்பியதும் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகள் இருக்கும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வரும் 2-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வரவிருக்கிறார். இதைத் தொடர்ந்து மே 3-ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும் சென்னைக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மூத்த நிர்வாகிகள் சென்னைக்கு வரும் நிலையில், தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்த நிலையில், அடுத்தடுத்து பாஜக தலைமை நிர்வாகிகள் சென்னைக்கு வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.