தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர், இன்று (ஏப்.30) முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேமுதிக திராவிடகழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என்றார். மேலும், கூட்டணி குறித்து தேர்ந்தல் நெருங்கும்போது முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக, தேமுதிக – தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்து பதவி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தொடர்கிறார். வி. இளங்கோவன் அவைத் தலைவராகவும், எல்.கே.சுதீஷ் பொருளாளராகவும், ப.பார்த்தசாரதி தலைமை நிலையச் செயலாளராகவும், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் கொள்கை பரப்புச் செயலாளராகவும், எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிட்டார். அத்தொகுதியில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரிடம் தோல்வியுற்றார். ஆனால் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந்தது. 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவருக்கு அத்தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது நினைவுகூரத்தக்கது. வரும் 2026-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய பிரபாகரை தேமுதிக இளைஞரணி செயலாளராக நியமித்துள்ளது அக்கட்சிக்கு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், சென்னை வடபழனி 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் தேமுதிக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தேமுதிகவின் அனைத்து மாவட்டத்திலும் கட்சிக்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவிற்கும் மற்றும் உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும் தேமுதிக சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
2. ஜம்மு காஷ்மீர் பகல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் செய்து 26 பேர் உயிர் இழந்ததோடு, பல பேர் காயமடைந்துள்ளனர். இதை தேமுதிக வன்மையாக கண்டிக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு எல்லைகளை இன்னும் பலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்து, இதுபோன்ற தீவிரவாத தாக்குதல் இனி நடக்காத வண்ணம் நமது நாட்டை காக்க வேண்டியது அவசியம்.
3. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.
4. விஜயகாந்திற்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
5. வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும், தீங்கும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.
6. சாதி வெறி தூண்டுதலால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பழிவாங்கும் உணர்வும், போதைக்கு அடிமையாகும் நிலையும் இருப்பதால், மாணவர்கள் தங்கள் வாழ்வை இழக்கிறார்கள். எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல் வழி காட்ட வேண்டியது அரசின் கடமையாகும். ஆகவே வரும் கல்வி ஆண்டில் “நல் ஒழுக்கம்” பாடப்பிரிவினையை (counselling) செயல்படுத்தி, அவர்களுக்கு அறிவுரையை வழங்கி, பெற்றோர்கள் ஆசிரியர்கள், காவல் துறை மற்றும் தமிழக அரசு இணைந்து மாணவர்களை நல்வழி படுத்தி, அவர்களின் எதிர்காலத்தை சீரமைக்க வேண்டும்.
7. தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தொடந்து நடந்துகொண்டிருக்கிறது. இதனால் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் குடும்பங்களின் பாதிப்புகளும், சண்டை சச்சரவுகளும் அன்றாடம் நடப்பது ஒரு நிகழ்வாக உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்களுக்கு முழு கவனம் செலுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது மதுபானம் (tasmac) விற்பனையை படிப்படியாக குறைத்தும், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்தும், தமிழகத்தை காக்க வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.
8. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் படகுகளை உடைப்பதும், மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், பல வருடங்களாக தொடந்து நடந்து வருகிறது. இதை தேமுதிக வன்மையாக கண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.
9. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
10. பட்டாசு ஆலைகளின் வெடிவிபத்து என்பது விருதுநகர் மாவட்டத்திற்கு சாபாக்கேடாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் ஓமலூர் போன்ற பல்வேறு இடங்களில் இந்த பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதும், பல உயிர்களை இழப்பதும் அன்றாடம் ஒரு நிகழ்வாக உள்ளது. எனவே தனிக்கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு அலைகளை ஆய்வு செய்தும், இனி இதுபோன்று உயிர் இழப்புகளும், விபத்துக்களும் நடக்காத வண்ணம் மக்களை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.