“தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, “சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று பெருமை பேசிய முதல்வரே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:
1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.
9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.
29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.
14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.
இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை “தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்” என்பதற்கு இந்த அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த கொலை – கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.