நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:-
பயங்கரவாதிகள் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கக்கூடாது. இந்தப் போர் இன்னும் முடிவடையவில்லை. நாங்கள் அனைத்து பயங்கரவாதிகளையும் பழிவாங்குவோம். யாராவது ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தி, அது அவர்களின் பெரிய வெற்றி என்று நினைத்தால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இது நரேந்திர மோடியின் இந்தியா. இங்கு பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது. இந்த நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும்.
இந்தப் போராட்டத்தில் 140 கோடி இந்தியர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய மக்களுடன் நிற்கின்றன.
பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை, எங்கள் போராட்டம் தொடரும், பயங்கரவாதச் செயல்களை செய்தவர்களுக்கு நிச்சயமாக தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று மீண்டும் நான் உறுதியளிக்க விரும்பிகிறேன். இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.