தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?: அண்ணாமலை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில்,
தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.

அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?

பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?

திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டு மொத்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதலமைச்சர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.