மனித கழிவை குடிநீரில் கலக்கும் செயல் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது: நிர்மலா சீதாராமன்!

மனித கழிவை இன்றும் குடிநீரில் கலக்கும் செயல் இந்த தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜிஎஸ்டி வந்த பிறகு பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டியிலும் உள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான ஒவ்வொரு தீர்மானமும் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படுகிறது.

முதலில் ஜாதிக்கு வெற்றி திமுக தேடுகிறதா? சமத்துவம் என்று சொன்னார்கள்? ஜாதியை பற்றிய விஷயத்தில் திமுக வெற்றி தேடுகிறதா? மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பை கொண்டு வருவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் தவறு ஒன்றும் இல்லை. பலபேர் கேட்டுள்ளனர். கேபினட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது எங்களின் வெற்றி என்று திமுக சொன்னால் ஜாதியை பற்றி திமுக பேசவே கூடாதே. அதனால் எல்லாவற்றிலும் அரசியல்ரீதியாக லாபத்தை தேட முயற்சி செய்யக்கூடாது. தமிழகத்தில் சமத்துவத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். எப்படியாக இருந்தாலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும். அதற்கான டேட்டா அனைவருக்கும் வரும். நாங்கள் போராடுவதால் தான் இது வந்துள்ளது என்று பெருமையாக கூற வேண்டாம்.

நான் இன்றும் செல்லும்போது ரோடுகளில் போர்டை பார்க்கிறேன். ஜாதி பெயருடன் கூடிய போர்டு உள்ளது. ஜாதி விவகாரத்தில் மனித கழிவை இன்றும் குடிநீரில் கலக்கும் செயல் இந்த தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது. இது வேறு எங்கும் நடக்கவில்லை. நாங்கள் நன்றாக முன்னேறி கொண்டு இருக்கிறோம். வடக்கில் சில மாநிலங்கள் முன்னேறவில்லை என்று சொல்கிறார்களே. அந்த மாநிலத்தில் கூட மனித கழிவை குடிக்கும் தண்ணீரில் சேர்க்கவில்லை. இதனால் இந்த விஷயத்தை அரசியல் ரீதியாக பார்க்காமல், அதில் இருந்து வரக்கூடிய டேட்டாவை வைத்து கொண்டு பின்தங்கியவர்களுக்கு எப்படி முன்னேற வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டுமே தவிர, நாங்கள் தோற்றோம். நீங்கள் வென்றோம் என்பது போன்ற பேச்சை விட்டு விட வேண்டும்.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.
ஊழல் கூட்டணிக்காரர்கள் எங்கள் கூட்டணி பற்றி பேசினால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.