ராமேசுவரம் தமிழக மக்களுக்கானது மட்டுமில்லை என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
குஜராத், மராட்டியம், இமாசலபிரதேச மாநிலங்கள் உருவான தின விழா கொண்டாட்டம் சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. தமிழகத்தில் வாழும் குஜராத், மராட்டியம், இமாசலபிரதேச மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் இந்த விழாவுக்கு வந்தனர். மேலும் இந்த விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குஜராத், மராட்டியம், இமாசலபிரதேச மாநிலங்கள் உருவான தினம் அந்தந்த மாநில மக்களுக்கான கொண்டாட்டம் கிடையாது. பாரத தேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்குமான கொண்டாட்டம். இந்தியாவில் ஒரு காலத்தில் 15 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. இப்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என பாரத தேசம் பரந்து விரிந்து உள்ளது. மாநிலங்களை மையப்படுத்திய வளர்ச்சியால் பாரத தேசம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
நம் பாரத தேசத்தை போல அழகான தேசம் உலகில் வேறு எங்கும் கிடையாது. குஜராத்தில் உள்ள துவாரகா குஜராத் மக்களுக்கு மட்டுமானது கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள ராமேசுவரம் தமிழக மக்களுக்கானது மட்டுமில்லை. இவை அனைத்தும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஆனது.
இந்தியர்கள் உணவு முறை, உடை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றில் வெவ்வேறாக இருந்தாலும் பாரத தேசம் எனும்போது ஒன்றிணைகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, பாரத தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் செயல்படுத்தி வருகிறார்.
அமெரிக்கா போல பல்வேறு மாகாணங்களாக பிரிந்து இல்லாமல் அனைத்து மாநிலங்களும் இணைந்த பாரத தேசமாக இந்தியா திகழ்கிறது. எந்த ஏற்றத்தாழ்வும், பாகுபாடும் இன்றி பாரத தேச மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவர்களுக்கான திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.