தமிழ்நாட்டில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாட்டிலும் கடைகளின் பெயர் பலகையில் முதலில் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் ஏராளமான தொழில் நிறுவனங்களும், கடைகளும், சிறு வியாபார கடைகளும், உணவகங்கள் என பலரும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, கடைகளின் பெயரை தமிழில் எழுதி பெயர் பலகையாக வைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டேயிருக்கிறது. ஆனாலும், பெரும்பாலான கடைகள் பெயர் பலகைகளை ஆங்கிலத்திலேயே வைத்துள்ளன.. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றன. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் 50 ரூபாய் என்றிருந்த அபராதம், பிறகு ரூ.2000 என்றானது. பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அவற்றை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
கோவை வஉசி மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்துள்ளார்.. ஜூன் 14 வரை நடக்கும் இந்த கண்காட்சியில், 31 அரசு துறைகளின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சியைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அமைச்சர் சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசு துறைகளின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவும் என்றார். கடந்த ஆண்டு 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் கண்காட்சியைப் பார்வையிட்டனர். இந்த ஆண்டும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தமிழ் பெயர் பலகை குறித்து அமைச்சர் பேசும்போது, “வணிகர் பேரமைப்பு நிர்வாகிகளுடன் ஏற்கனவே பேசியுள்ளோம். ஆங்கிலத்தில் உள்ள பெயர் பலகைகளை மாற்றி, தமிழில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.. தமிழில் பெயர் வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். இதை தமிழ் வளர்ச்சி துறை கண்காணித்து வருகிறது. தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு காணொளி மூலம் வழிகாட்டி வருகிறார். இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம்.. இது மக்களாகவே உணர்ந்து செயல்படுத்த வேண்டும். இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதற்கான காலக்கெடு விதிக்கப்படும்.. கர்நாடகாவில் முதலில் கன்னடம் எழுதப்பட்டு இருக்கும். அதுபோல தமிழகத்திலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.