பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரைவழி, வான்வழி என எந்த விதத்திலும் பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்கள் ஊக்குவிக்கப்படாது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடாடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தியா அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவிழ்த்து விடுகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பகல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 1. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், 2. அட்டாரியில் உள்ள சோதனைச்சாவடி மூடல் 3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். 4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். 5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து வான்வழி பயன்பாட்டில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வந்தவண்னம் உள்ளன.
அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் தடை விதித்து இந்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கான தடை உத்தரவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2024 – 2025 ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா 447.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளது. அதேசமயம் வெறும் 0.42 யுஎஸ் டாலர் மதிப்பிலான சொற்பமான அளவிலேயே இறக்குமதி செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தானுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்ற கணிப்பில் இந்தியா இறக்குமதி தடையை அமல்படுத்தினாலும் கூட பாகிஸ்தான் பதறுவதாகத் தெரியவில்லை. இந்தியாவின் உடனடி 5 நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான வர்த்தகத்தை முறித்துக் கொள்வதாகக் கூறியது. மேலும், இன்று (மே 3) 450 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கக் கூடிய அதிநவீன ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ராணுவம் பலமாக இருப்பதை உறுதி செய்யவும், நவீன ஆயுதங்களின் தரநிலையை பரிசோதனை செய்யவும் இந்தச் சோதனையை மேற்கொண்டதாகக் கூறியுள்ளது.