சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர், இலங்கைக்கு விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வந்த தகவலையடுத்து, இலங்கையின் பண்டாரநாயகே விமான நிலையத்தில், சென்னையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பயங்கரவாதிகளும் சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கை தப்பியிருக்கலாம் என்று இந்திய புலனாய்வுப் பிரிவு அளித்த தகவலையடுத்து இன்று சனிக்கிழமை, ஸ்ரீலங்கன் விமான நிலையத்தில் சிறப்புச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியா தரப்பிலிருந்து, 6 பயங்கரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னையிலிருந்து வந்த விமானம், பண்டாரநாயகே விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தேடுதல் பணி நடத்தப்பட்டது.
சென்னையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல்122 எண் விமானம் சென்னையிலிருந்து இன்று முற்பகல் 11.59 மணிக்குப் புறப்பட்டு கொழும்பு சென்றதும், பாதுகாப்புப் படை அதிகாரிகளால் முழுவதுமாக சோதனையிடப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புச் சோதனையானது, இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் விமானத்தில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல்படி, உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த விமானம் அடுத்து சிங்கப்பூர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், எங்களது பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிக மோகமான தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.