தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்: ஜெய்சங்கர்!

செயற்கை நுண்ணறிவு காலத்தில் சாத்தியக்கூறுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் 77 நாடுகளைச் சேர்ந்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சர் எல்.முருகன் உரையாடினார்கள். அப்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:-

உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வேவ்ஸ் ஒரு சிறந்த தளமாக இருக்கும். நம்முடைய மரபுகள், பாரம்பரியம், கருத்துகள், நடைமுறைகள் மற்றும் படைப்பாற்றலுக்கு நாம் எப்போதும் குரல் கொடுக்க வேண்டும். தொழில்நுட்பமும், பாரம்பரியமும் இணைந்து பயணிப்பது என்பது தற்போதைய காலத்தில் அவசியமானது.

ஏனென்றால் தொழில்நுட்பம் நம்முடைய பரந்த பாரம்பரியத்தை பற்றிய விழிப்புணர்வை வலுப்படுத்துகிறது. அதன் மூலம் நம்முடைய நனவை மேலும் வேரூன்ற செய்ய முடியும். இன்றைய இளைய தலைமுறையினர் படைப்பாற்றல் மிகுந்த இந்த யுகத்துக்கு பொருத்தமான திறன் மேம்பாட்டின் மூலம் தங்களை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். விக்சித் பாரதத்தை உருவாக்கும் முன்னேற்றத்துக்கு புதுமை என்பது மிகவும் முக்கியமானது.

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் சாத்தியக்கூறுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உலகளாவிய பணி இடங்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டமைப்புகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.