தமிழர்களிடம் இருந்து ஆன்மீகத்தை அகற்ற சதி நடக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சைவ சித்தாந்த மாநாட்டில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே உள்ள காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மயிலாடுதுறை ஆதினம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் அனைத்துலக 6-ஆவது சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு வரும் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவருடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், துணை வேந்தர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிவாச்சாரியர்கள், ஆதினங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். அதில் சமுதாய வேறுபாடு கிடையாது. பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும்; பக்தியின் மூலம் ஆன்மீகம் காப்பாற்றப்படுகிறது. சனாதன தர்மமே ஆன்மீகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் வலியுறுத்துகிறது. ஆன்மீகம் அறிவியல்பூர்வமானதாக இல்லை எனக்கூறி அதை அழிக்க நினைக்கிறார்கள். பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது. சிவபெருமானை அழிப்பது சாத்தியமில்லை. காஷ்மீரோ, தமிழகமோ.. சைவ சித்தாந்தத்தை பரப்புவது முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது. இவ்வாறு ஆளுநர் ரவி சைவ சித்தாந்த மாநாட்டில் பேசி இருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக சனாதனம், ஆன்மீகம் சார்ந்து பேசி வருவதால் திமுக அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு வெடித்து வருகிறது.