கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை!

மறைந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் ‘தமிழ் வார விழா’வாகக் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழா நிகழ்ச்சி இன்று(திங்கள்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மறைந்த எழுத்தாளர்கள் கவிக்கோ அப்துல் ரகுமான், மெர்வின், ஆ. பழநி மற்றும் கொ.மா.கோதண்டம், புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகிய 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாவேந்தர் பாரதிதாசன், தமது இளம் வயதிலிருந்தே தமிழ்மொழி மீது தணியாத தாகமும் பற்றும் கொண்டிருந்தார். மகாகவி பாரதியார் புதுவையில் தங்கியிருந்தபோது, அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பாரதியாரின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவர் போலவே இனிய கவிதைகளை எழுதினார். பாரதியாரைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, பாரதிதாசன் எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன், தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என்று பல்வேறு துறைகளில் தமிழ்மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர். பாவேந்தர் பாரதிதாசன் 86-க்கும் மேற்பட்ட நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் படைத்துள்ளார். அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக 1970-ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாடமி விருது’, வழங்கப்பட்டது.

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, ‘தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ போன்ற பல்வேறு காலத்தால் அழியாத பாடல்களை படைத்துள்ளார். தம் படைப்பாற்றல் மூலம் தமிழுக்குப் பல வழிகளில் தொண்டாற்றி, தமிழ் இனத்திற்கு எழுச்சியூட்டிய பாவேந்தர் பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் 22.4.2025 அன்று சட்டமன்ற பேரவையில், விதி எண்.110-ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, இவ்விழாவினை சிறப்பாக நடத்திட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையால் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இவ்விழாவினை 29.4.2025 முதல் 5.5.2025 வரை தமிழ்நாடு முழுவதும் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் 4 ஆண்டுகளில், தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டது.

மேலும், தமிழறிஞர்கள் நன்னன், சிலம்பொலி செல்லப்பன், விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் இரா. குமரவேலன், மம்மது உள்ளிட்ட 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான நூலுரிமைத் தொகையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தமிழ் வார விழாவின் நிறைவு நாளான இன்று (5.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், மெர்வின், ஆ. பழநி ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களின் மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசனின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இவ்விழாவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. கல்லூரி மாணவியரின் இசைநிகழ்ச்சியையும் தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்த குறும்படத்தையும் முதல்வர் பார்வையிட்டார்.

இந்த விழாவில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.