தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: பெ.சண்முகம் கண்டனம்!

“தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (மே 5) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள் ஆதிக்க சாதி வெறியர்கள் உள்ளே புகுந்து பட்டியலின மக்களை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கி, வீடுகளை அடித்து நொறுக்கியும், தீயிட்டு கொளுத்தியும், அங்கிருந்த இரண்டு கார்களையும், இரண்டு இரு சக்கர வாகனங்களை எரித்தும், ஒரு இருசக்கர வாகனத்தை அடித்து முற்றிலுமாக நொறுக்கியுள்ளனர்.

பலத்த வெட்டுக்காயங்களுடன் எட்டு பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆதிக்க சாதி வெறியர்களின் இந்த கொடூரமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்நிலையில், காவல் துறை விளக்க அறிக்கை என்ற பெயரில் நடந்த சம்பவத்தை மூடி மறைக்கும் வகையிலும் திசை திருப்பும் விதத்திலும் வெளியிட்டுள்ளது ஏற்கத் தக்கதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதனால் சாதிய மோதலில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் காவல் துறை செயல்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பட்டியலின மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு உடனடியாக உரிய இழப்பீடுகளை வழங்கி அவர்கள் மீண்டும் குடியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகாடு பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும். இத்தாக்குதல்களுக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட சக்திகள் தங்களது வலுவான கண்டன குரலை எழுப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.