நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக 7 பேர் கைது!

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பிகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போலி தேர்வர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப மோசடி சாதனங்களை உள்ளடக்கிய ஒரு மோசடியை போலீஸார் முறியடித்தனர்.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் ஜெய்ப்பூரின் ஜகதாம்பா நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்து போலி நுழைவுச் சீட்டுகள், ஏஐ தொழில்நுட்பம் மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்கள், புளூடூத் சாதனங்கள், சிம் கார்டுகள், ரூ.50,000 ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். அங்கிருந்த அஜித் குமார், சோகன் லால் சவுத்ரி (இருவரும் ஜெய்ப்பூர் தேசிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முதுகலை மாணவர்கள்), ஜிதேந்திர சர்மா (கர்நாடகாவை சேர்ந்த எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர்) ஆகிய மூவரை கைது செய்தனர். பிறகு ரோகித் கோரா, சஞ்சய் சவுத்ரி ஆகிய 2 தேர்வர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் அமித் குமார் கூறுகையில், “விரைவாக பணம் சம்பாதிப்பதற்காக 2 முதுகலை மாணவர்களால் இந்த மோசடி திட்டமிடப்பட்டது. நீட் தேர்வில் கோராவை போலவும், வரவிருக்கும் துணை மருத்துவ தேர்வில் சவுத்ரியை போலவும் ஆள்மாறாட்டம் செய்ய ஜிதேந்திர சர்மா தயாராக இருந்தார்” என்றார்.

இதுபோல் பிகாரில் நுழைவுச்சீட்டு மோசடி, ஆள்மாறாட்டம் தொடர்பாக பெகுசராய் சிறை மருத்துவர் ரஞ்சித் குமார், தர்பங்காவை சேர்ந்த ராம்பாபு மாலிக் ஆகிய இருவரை சமஸ்திபூர் மாவட்டத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து கூடுதல் எஸ்.பி. சஞ்சய் பாண்டே கூறுகையில், “இவர்கள் இருவரும் ஒரு தேர்வு மையத்துக்கு அருகில் சந்தேகப்படும் வகையில் அமர்ந்திருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தோம். அவர்களின் செல்போனில் பல்வேறு மாணவர்களின் நுழைவுச் சீட்டுகள் இருந்தன. நுழைவுச் சீட்டில் மோசடி செய்து ஆள்மாறாட்டம் செய்வதற்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிப்பதாக ரஞ்சித் குமார் ஒப்புக்கொண்டார்” என்றார்.

பிகாரில் மேலும் மூவரிடம் நீட் மோசடி தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுபோல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய ஒரு மாணவருக்கு போலி நுழைவுச் சீட்டு தயாரித்துக் கொடுத்த கிரீஷ்மா என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்த மாணவரும் கைது செய்யப்பட்டார்.