“இந்தியப் படைகள் தனது அற்புதமான வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளன” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள எல்லை சாலை அமைப்பின் சார்பில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 50 எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நேற்றிரவு இந்தியப் படைகள் தங்கள் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய ராணுவம் துல்லியம், விழிப்புணர்வு மற்றும் உணர்திறனுடன் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாங்கள் நிர்ணயித்த இலக்குகள் திட்டமிட்டபடி துல்லியமாக அழிக்கப்பட்டன. பொதுமக்களுக்கோ, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் முழு முனைப்பு காட்டினோம். இதன்மூலம், ராணுவம் துல்லியம், முன்னெச்சரிக்கை மற்றும் இரக்கத்தைக் காட்டியுள்ளது. இதற்காக நமது ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒட்டுமொத்த நாட்டின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராணுவத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அசோக வனத்தை அழிக்கும்போது அனுமன் பின்பற்றிய “நமது அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் கொன்றோம்” என்ற கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்.
முன்பு போலவே, இந்த முறையும் நமது படைகள் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை அழித்ததன் மூலம் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளன. இந்தியா தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு ‘பதிலடி கொடுக்கும் உரிமையை’ பயன்படுத்தியுள்ளது. நமது நடவடிக்கை மிகவும் சிந்தனையுடனும் அளவிடப்பட்ட முறையிலும் எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் மன உறுதியை உடைக்கும் நோக்கத்துடன், அவர்களின் முகாம்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு மீண்டும் ஒருமுறை தலை வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.