அசாம் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாட்கள் தங்கியிருந்தார், அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கவுரவ் கோகோய் பாகிஸ்தான் சென்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரது வருகை மற்றும் புறப்பாடு அட்டாரி எல்லையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமாபாத்தில் 15 நாட்கள் தங்கியிருந்தார். முதல் 7 நாட்கள் அவருடன் அவரது மனைவி தங்கியிருந்தார். மனைவி திரும்பிய பிறகு கோகோய் அங்கு தங்கியுள்ளார். அவரது பயண விவரம் அனைத்தும் எங்களிடம் உள்ளது. அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம் என கருதுகிறோம். அவர் ராணுவத் தலைமையகம், லாகூர், சிந்து அல்லது பிற முக்கியமான இடங்களுக்குச் சென்றாரா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கப்பட வேண்டும் வேண்டும். இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
கவுரவ் கோகோய் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. மேலும் அவர் பாகிஸ்தானுக்கு சென்றதை இதுவரை மறுக்கவில்லை.