நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் தான் தான் அடுத்த முதலமைச்சர் என்று பேசி வருவதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பு ஏற்றது. ஆட்சிப் பொறுப்பு ஏற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 2,800 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியதாவது:-
நானும் டெல்டாகாரன் தான், மண்ணின் மைந்தன். மயிலாடுதுறை மாப்பிள்ளை நான். எப்பவும் மாப்பிள்ளையாக இருக்கக்கூடியவன் நான். ஏனென்றால் மாப்பிள்ளை தான் விட்டுக்கு வருபவர்களை வரவேற்பார்கள். அந்த வகையில் உங்களை வருக வருக என கலைஞர் சார்பில் வரவேற்கிறேன்.
இப்போது திமுகவிற்கு நல்ல பேச்சாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். உங்களை நாங்கள் அரவணைத்து இயக்கத்தில் சேர்த்துள்ளோம். நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான் தான் அடுத்த முதலமைச்சர் என சொல்கிறார்கள். அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம் நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று பேசக்கூடிய நிலை உள்ளது. நாம் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆட்சிக்கு வர வேண்டும், ஆட்சிதான் குறிக்கோள் என்ற எண்ணத்தோடு திமுக தொடங்கப்படவில்லை. ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திமுகவை அண்ணா தொடங்கினார். கட்சி தொடங்கிய உடனே நாம் தேர்தல் களத்திற்கு வரவில்லை. 57-ல் தேர்தல் களத்திற்கு வந்தோம்.
திருச்சியில் அண்ணா மாநாட்டை வைத்து, ஒரு பெட்டியை வைத்து தேர்தலுக்கு போகலாமா என்று எழுதி போட சொல்லி பிறகு நாங்கள் தேர்தலுக்கு வந்தோம். பிறகு அண்ணா தேர்தலில் நிற்கலாம் என்று கூறினார். தேர்தலில் நின்று 15 இடங்களில் வெற்றி பெற்றோம். பிறகு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அடுத்த தேர்தலில் ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றோம். அண்ணா தலைமையில் பிறகு ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் எமர்ஜென்ஸியை எதிர்த்தவர் கலைஞர் மட்டும் தான். அதை எதிர்த்து தீர்மானமும் நிறைவேற்றினார். தீர்மானத்திற்கு முதல் நாள் டெல்லியிலிருந்து இரண்டு தூதுவர்கள் வந்து கலைஞரை சந்தித்து கடிதம் வழங்கினார்கள். அந்த கடிதத்தில் எமர்ஜென்ஸியை எதிர்க்க கூடாது. அப்படி எதிர்த்தால் உங்கள் ஆட்சி தொடராது. இல்லையென்றால் ஆட்சி தொடரும் என்று இருந்தது. அதற்கு கலைஞர், “என் உயிரே போனாலும் நான் அதிகாரத்திற்கு அடிபணிய மாட்டேன். ஜனநாயகத்தின் பக்கம் தான் நிற்பேன்” என பதில் சொன்னார். நாளைய தினம் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். 2026 தேர்தலில் வென்று ஏழாவது முறையாக நாம் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம். பதவி ஆசைக்காக இதை சொல்லவில்லை. மக்கள் நலனுக்காக சொல்கிறேன்.
இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டி இந்த ஸ்டாலின் தான். ஆணவத்திலோ அகங்காரத்திலோ மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லவில்லை. இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி, மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக திமுக ஆட்சி இருந்து வருகிறது. ஆளுநர் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இனிமேல் அவர் நன்மை செய்தாலும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவருக்கு சம்பளம் கொடுப்பதே தமிழ்நாடு மக்கள். கவர்னர் என்ற பதவியை வைத்து தமிழ்நாடு மக்களுக்கு அக்கிரமம் செய்துகொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.