முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையைப் பராமரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 2011-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் அணை பாதுகாப்பு சட்டம் 2021 நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை மேற்கோள் காட்டி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணியை கண்காணிக்க மேற்பார்வை குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி தேசிய அணை பாதுகாப்பு அணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் அடங்கிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த மார்ச் மாதம் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணையை பராமரிப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்கியது.
இந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், திபாங்கர் தத்தா, கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் கூறும்போது, “நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது” என்று தெரிவித்தார்.
மத்திய அரசு முன்வைத்த வாதத்தில், “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணையை பலப்படுத்த தமிழகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரளாவிடம் மத்திய அரசு கூறியது. முதலில் அனுமதி அளிப்பதாக கூறிய கேரளா, பின்னர் அனுமதி வழங்க மறுத்தது” என்று தெரிவிக்கப்பட்டது.
கேரள அரசு வழக்கறிஞர் கூறும்போது, “இந்த பிரச்சினை தொடர்ச்சியாக நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறுகையில், அணை பாதுகாப்பு குறைவாக இருக்கிறது கேரளா குற்றம்சாட்டுகிறது. ஆனால் அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கிறது. இப்போதைய சூழலில் அணையின் பாதுகாப்பு மிகவும் அவசியம். எனவே முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு தொடர்பாக மேற்பார்வை குழு அளித்த பரிந்துரைகளை 2 வாரங்களில் அமல்படுத்த வேண்டும். மழை அளவு உள்ளிட்ட விவரங்களை தமிழக, கேரள அரசுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரளாவின் குற்றச்சாட்டை நீதிபதிகள் நிராகரித்தனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.