ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:-
மொத்தம், ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது.
25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த போது 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அது போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகில் உள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடி சப்தங்கள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது. இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு ஏவுகணை காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவதத்தினர் கூறுகையில் இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராவல்பிண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. தற்போது இந்த பதற்றமான சூழலையொட்டி பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தொலை தூரம் பயணிக்கும் வலிமையான ஏவுகணைகளை கொண்டு துல்லியமாக தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அங்கிருந்த கட்டடங்கள் எல்லாம் தரைமட்டமாகின. இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. மசூர் அஸாதின் மதரஸா முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே வேளையில் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளிலோ பாகிஸ்தான் ராணுவ பகுதிகளிலோ இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தவில்லை.