‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றனர்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் தகவல்கள் செய்தியாளர்களுக்கு இன்று (மே.7) காலை விவரிக்கப்பட்டது. முதலில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பதை விவரித்தார்.
அப்போது அவர், ”பகல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து, பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம்.” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பெண் அதிகாரிகளான விங் கமாண்டர் வியோமிகா சிங். மற்றும் கர்னல் சோபியா குரேஷியும் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, எங்கெங்கு நடத்தப்பட்டது போன்ற விவரங்களைப் பகிர்ந்தனர். பகல்காம் தாக்குதலை அடுத்து நீதி கோரி உயிரிழந்தவர்களின் வீட்டுப் பெண்கள் எழுப்பிய குரலைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் குறித்த விவரிப்பை இரண்டு பெண் அதிகாரிகள் கொண்டு ராணுவம் எடுத்துரைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தேசிய அளவில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.
விங் கமாண்டர் வியோமிகா சிங், 6 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே விமானப் படையில் சேரும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். ‘வியோமிகா’ என்ற அவரது பெயரின் அர்த்தம் ‘வானத்தில் வசிப்பவள்’ என்பதாகும். இதனை பள்ளியில் கூறிய நாள் முதலே தனது லட்சியக் கனவாக விமானப் படையில் சேர்வதை அவர் கொண்டிருக்கிறார். அவர் தம் பள்ளிப்படிப்பை முடித்தபோது, விமானப் படையில் பெண்கள் மிகக் குறைவான அளவில் மட்டுமே சேர்வதாகக் அறிந்துள்ளார். எனவே அவர், மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வில் மூலம் விமானப் படையில் சேரும் தகுதி பெற்றுள்ளார்.
பின்னர் வியோமிகா இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விமானியானார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு விங் கமாண்டர் என உயர்ந்தார். கடந்த டிசம்பர் 18, 2004 அன்று இந்திய விமானப் படையில் நியமிக்கப்பட்டார்.
தற்போது இந்திய ராணுவத்தின் சிறந்த விங் கமாண்டர்களில் ஒருவராக வியோமிகா கருதப்படுகிறார். அவருக்கு போர் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் சிறந்த அனுபவம் உள்ளது. சீட்டா சேதக் போன்ற போர் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் அவருக்கு நிபுணத்துவம் உள்ளது. வியோமிகா சிங் 2500-க்கும் மேற்பட்ட மணி நேரங்களை பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மணிராங் மலை ஏறிய விமானப் படையின் பெண்கள் பிரிவின் ஒரு பகுதியாகவும் வியோமிகா இருந்துள்ளார். இன்று, ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு, வியோமிகா சிங் பற்றி பரவலாக விவாதிக்கப்படுகிறது.
கர்னல் சோபியா குரேஷி குஜராத்தைச் சேர்ந்தவராவார். குஜராத்தின் வதோதராவாசியான சோபியா குரேஷி, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிக்னல் கார்ப்ஸில் உள்ளார். சோபியா குரேஷி 1999 இல் ஷார்ட் சர்வீஸ் கமிஷன்(குறுகிய சேவை ஆணையம்) கீழ் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது 17 வயதுதான் அவருக்கு. சோபியாவின் குடும்பம் ராணுவத்தில் பணியாற்றிய பின்னணியைக் கொண்டது. சோபியாவின் தாத்தாவும் ராணுவத்தில் இருந்தார். அவரது கணவர் ராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். மார்ச் 2016-ல், பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் ராணுவப் படையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை சோபியா குரேஷி பெற்றார்.
இவரது தலைமையிலான ‘உடற்பயிற்சிப் படை 18’ பயிற்சித் திட்டம் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சியாகும். இதில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கமான ‘ஆசியான்’ உறுப்பு நாடுகள் இடம்பெற்றன. இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை கலந்து கொண்டன. இந்த பயிற்சித் திட்டமானது, மகராஷ்டிராவின் புனேவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.