பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலின் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா கூறியதாவது:-
பகல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையிலும், காட்டுமிராண்டித்தனமாகவும் கொல்லப்பட்ட பிறகு, இந்தியா தனது பதிலடி உரிமையை பொருத்தமான மற்றும் விகிதாசார முறையில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாகிஸ்தானின் எந்தவொரு ராணுவ இலக்கும் தாக்கப்படவில்லை. அதேபோல், பொதுமக்களும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசும் இந்திய பாதுகாப்புப் படைகளும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பயங்கரவாத தளங்களை மட்டுமே தாக்கியுள்ளனர்.
ஆனால், பாகிஸ்தான் இந்திய எல்லையின் சில பகுதிகளில் குண்டுவீசித் தாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டனர். அவர்கள்தான் தாக்குதலைத் தொடங்கினர், நாம் அல்ல. நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நம்மில் யாரும் போரை விரும்பவில்லை. நிலைமை மீண்டும் மேம்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதற்கு முதலில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிகளைக் கீழே இறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.