இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி!

இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. வேறு எந்த மாநிலமும் வாழ்வதற்கு தகுதியற்று உள்ளது எனவும், யார் தவறு செய்தாலும், ஏன் அமைச்சராகிய நானே தவறு செய்தாலும் அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள மாட்டார் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள், 2 நகர்புற பேருந்துகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வழங்கினார். பின்னர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

சிறுமலையில் பட்டா கேட்பவர்களுக்கு வனத்துறையுடன் பேசி அதற்கான வாய்ப்புகள் இருந்தால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப் பகுதிகளில் வனத் துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை நிதி மூலம் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பேருந்து சேவையில் நத்தம் தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி இல்லை, நத்தம் தொகுதிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து விடலாம். திண்டுக்கல்லில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டுமே பேருந்து வசதி அதிகமாக செய்யப்படவில்லை. வாகனங்கள் அனைத்தும் தயாராகி வருகிறது. ஒவ்வொரு தொகுதியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த தொகுதியும் புறக்கணிக்கப் படாது. எங்கு பேருந்துகள் இல்லை என்ற பட்டியலை கொடுங்கள் அங்கு பேருந்துகள் விடப்படும்.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் உள்ளது. மக்கள் மக்களை பார்த்துக் கொள்ளுங்கள் என எடப்பாடி கூறியுள்ளார். இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. வேறு எந்த மாநிலமும் வாழ்வதற்கு தகுதியற்று உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு கூற வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எங்கு கெட்டுள்ளது? தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வயதுக்கு வந்த பெண்கள் கூட நடந்து செல்லலாம். எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கும் இடமே கிடையாது. தமிழ்நாடு காவல்துறையினர் விமானத்தில் ஏறி அமர்ந்த நபரையே கைது செய்து அழைத்து வந்துள்ளோம். ஸ்காட்லாண்டு காவல்துறையினருக்கு இணையாக காவல் துறையே முதல்வர் வைத்துள்ளார். தமிழ்நாடு மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்கு உறுதி அளித்துள்ளார்.

காவல்துறை மீது திருமாவளவன் வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மையில்லை. யார் தவறு செய்தாலும் அமைச்சராகிய நானே தவறு செய்தாலும் அதனை முதல்வர் ஏற்றுக் கொள்ள மாட்டார். என்ன நடந்தது என்பதை விசாரித்து தான் முடிவு எடுப்பார்கள். காவல்துறை மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது அது உண்மையா என்பதை பார்க்க வேண்டும். தவறு இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். திருமாவளவனுக்கு எதிர் கருத்து இல்லை. பாதிக்கப்பட்டு இருந்தால் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு எடுப்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் பேசியுள்ளார். அவரது கருத்தை எங்களது கருத்து. முதல்வர் அவரது கருத்தில் இறுதி வரை நிலையாக நிற்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.