இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழகம் உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய பாதுகாப்பு படையை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது மக்களைப் பாதுகாப்பதற்கும் நமது ராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்! காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்” என கூறியுள்ளார்.