திமுகவின் ஆட்சியில் பெரிய சாதி மோதல்கள், வன்முறைகள் இல்லை: முதல்வர் ஸ்டாலின்!

“திமுகவின் ஆட்சியில் பெரிய சாதி மோதல்கள், வன்முறைகள் இல்லை” என்று சென்னையில் நடந்த நான்காண்டு சாதனை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 7) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்ற நான்காண்டு சாதனை விழாவில் பேசியதாவது:-

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால்தான், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக மட்டுமல்ல, உற்சாகமாகவும் இருக்கிறேன். ஏனென்றால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழகம் நிமிர்ந்திருக்கிறது என்று தமிழக மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் எவையெல்லாம் இல்லை என்று பட்டியல் போடவேண்டும் என்றால், வறுமை இல்லை, பட்டினிச் சாவு இல்லை, பணவீக்கம் இல்லை, பெரிய சாதி மோதல்கள் இல்லை, மதக் கலவரங்கள் இல்லை, வன்முறைகள் இல்லை, இப்படி, சமூகத்தை பின்னோக்கித் தள்ளும் தீயவை இல்லை, இல்லை, இல்லை என்ற சூழ்நிலையைத்தான் இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரைக்கும், நான் ஒரு கையெழுத்திடுகிறேன் என்றால், அதில், பலருடைய வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். சமத்துவத்தை நோக்கி இந்தச் சமூகம் முன்னேற வேண்டும். சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இதைத்தான் என்னுடைய வாழ்க்கையின் பயனாக நான் நினைக்கிறேன். இந்த ஆட்சி அமையும்போது, இதற்கு நாம் கொடுத்த பெயர் என்ன தெரியுமா? ‘விடியல் ஆட்சி!’ ஏனென்றால், பத்தாண்டு காலமாக படுபாதாளத்துக்கு தள்ளப்பட்டு, தன்மானம் இல்லாத கூட்டத்தால், தரையில் ஊர்ந்து கிடந்த தமிழகத்தை தட்டியெழுப்பி, தமிழகத்துக்கும், தமிழருக்கும் விடியலைக் கொடுக்க வேண்டும் என்று உறுதியேற்று, அதற்கு விடியல் ஆட்சி என்று பெயரிட்டோம். நான் மிகவும் உறுதியாக ஏன், சவால் செய்தே சொல்வேன், இன்றைக்கு தமிழ்நாட்டை பல மடங்கு முன்னேற்றியிருக்கிறோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் விடியலை ஏற்படுத்தி, வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறோம். இது உறுதி. இந்த நான்காண்டுகளில், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு பயனாளிக்கும் இதுவரைக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 14 லட்சம் மகளிர்க்கு, ஆயிரம் ரூபாய் என்று இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

அதுபோல், விடியல் பயணம் திட்டத்தில் இதுவரைக்கும், சுமார் 685 கோடி பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, நாம் ஆட்சிப் பொறுப்பு வருவதற்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது மகளிர் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் 86 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. அடுத்து, இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’. இந்த திட்டத்தால் நாள்தோறும் 18 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடுகிறார்கள். இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகமாகியிருக்கிறது. குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரித்திருக்கிறது. ஊட்டச்சத்தும் அதிகரித்திருக்கிறது.

புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களைப் பொறுத்தவரைக்கும், இதுவரைக்கும் சுமார் ஒன்பது லட்சம் மாணவிகளும், நான்கு லட்சம் மாணவர்களும், சுமார் 13 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். இதனால், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுடைய சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது. இப்படி, ஒவ்வொரு பிரிவினருக்குமான நலத்திட்டங்கள் என்று எடுத்துச் சொன்னால், இந்த ஒரு நாள் போதாது.

நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்று எல்லார்க்கும் எல்லாம் என்ற வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம். அதனால்தான் சொல்கிறேன் இது, உதயசூரியன் கொடுக்கக்கூடிய புதிய விடியல்.

இதுமட்டுமல்ல, மத்திய அரசு வெளியிடுகின்ற அனைத்து புள்ளிவிவரங்களையும் பார்த்தீர்கள் என்றால், நம்முடைய தமிழ்நாடு தான் முன்னிலையில் முதலிடத்தில் இருக்கிறது. மத்திய அரசின் விருதுகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினுக்கான விருதுகளாக, பாராட்டுகளாக நான் நினைக்கவில்லை. இது தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பாராட்டுக்கள். உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுக்கள்.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கிறது. 9.69 விழுக்காடு வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி இது. என்னைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய திட்டங்கள் மூலமாக மக்களுக்குப் பணப்பயன் மட்டுமில்லை; சமூகப்பயனும் சென்றடைய வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். சுலபமாக சொல்ல வேண்டும் என்றால், இது வழக்கமான ஆட்சி அல்ல; அனைவருடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்ற ஆட்சி. இந்த ஆட்சி எந்நாளும் தொடர உங்கள் ஆதரவும், உங்களுடைய அன்பும், என்றும், எப்போதும் தேவை.

இந்த நான்கு ஆண்டு காலத்தில் எல்லாவற்றையும் செய்து விட்டதாக நான் சொல்லி முடிக்கவில்லை. இன்னும் செய்ய வேண்டிய கடமைகளும், திட்டங்களும் நிறைய இருக்கிறது. இந்த ஆட்சிக் காலத்துக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதை கடந்து, உங்கள் ஆதரவுடன் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் வென்று, திராவிட மாடல் ஆட்சிதான் தொடரப் போகிறது. தமிழ்நாட்டை அரியணையில் வைத்து பாதுகாத்திட, திமுகவும், இந்த ஸ்டாலினும் இருக்கிறேன். உங்கள் ஆதரவில் நமது திராவிட மாடல் ஆட்சி தொடரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.