வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்! நல்வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி-தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்!
தோல்விதான் வெற்றியின் தாய்! தோல்வி என்பது தோல்வி அல்ல; அதுதான் வெற்றிக்கான முதல் படி!
இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம் நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப் போவதில்லை!தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காதவரை!
உலகில் வெற்றியின் சிகரங்கள் தொட்ட சாதனையாளர்கள் யாவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள்தான்!
மதிப்பெண்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மந்திர எண்கள் அல்ல! அவை
குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் பயின்றதை அளவிடும் வெறும் அளவீட்டு எண்கள்தான்!
மதிப்பெண்கள் மட்டுமே மனித அறிவையும், ஆற்றலையும் தீர்மானிப்பதில்லை!
ஆகவே, என்னருமை தம்பி-தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்! உறுதியாக வெற்றி பெறுவீர்கள்! வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்! நல்வாழ்த்துகள்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.