வன்னியர் இளைஞர் மாநாட்டில் அமைதி, கட்டுப்பாட்டுடன் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: அன்புமணி!

மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த விழாவை பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டியது அவசியம். நாம் இந்த மாநாட்டை நடத்துவது, நமது வலிமையை காட்டுவதற்காக அல்ல. தமிழக வளர்ச்சி, சமூகநீதி மற்றும் மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு தேவையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக முன்வைத்து நிறைவேற்ற செய்வதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.

நாம் முன்னேறினால் மட்டும் போதாது. கல்வி, சமூகநிலையில் பின்தங்கியுள்ள அனைத்து சமுதாயங்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் நமது உன்னத நோக்கம். மாநாட்டுக்கான நமது கோரிக்கைகளும் அந்த நோக்கத்தை சார்ந்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. தவிர, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆபத்தை தகர்க்க வேண்டும் என்றால் நமது கோரிக்கைகள் வெல்ல வேண்டும்.

மாமல்லபுரம் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்த சூழலில், மாநாட்டை வெற்றி பெற செய்யவும், சமூகநீதிக்கான கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அமைதி, கட்டுப்பாட்டுடன் அணிவகுத்து வருமாறு அழைக்கிறேன்.

நமது மாநாடு எந்தவித விமர்சனத்துக்கும் இலக்காகிவிட கூடாது. சிறு சலசலப்புகூட ஏற்பட கூடாது. அதற்கு நீங்கள் இடம் தந்துவிட கூடாது. மாநாடு தொடர்பாக காவல் துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ராணுவத்துக்கு இணையான கட்டுப்பாட்டை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.