பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில், பயங்கரவாதிகள் அமைத்திருந்த 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தொழித்து இருக்கின்றது. இதில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 24 ஏவுகணை தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் வாசி உட்பட 26 பேர்கள் கொடூரமாக கொல்லப்பட்டத்திற்கு உறுதியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், உடைமைகளை கவனமாக தவிர்த்து, பயங்கரவாதிகள் முகாம்களை மட்டும் துல்லியமாக குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய ராணுவத்தின் திறனுக்கும், ஆற்றலுக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது உண்மை எனில், இந்தியா ராணுவத்தின் சிந்தூர் நடவடிக்கை மீது எதிர்மறை கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு பாலூட்டி வளர்க்கும் பாகிஸ்தானின் செயலை தடுக்க சர்வதேச சமூகத்தின் ஒரு முகமான கருத்தை திரட்ட வேண்டும்.
இது மட்டும் அல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்தி, கருத்திணக்கத்தை உருவாக்கி, நாடு ஒரு முகாமாக பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராடும் என்பதை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் இந்திய ராணுவத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.