காஷ்மீரில் சிக்கியுள்ள 17 தமிழ் மாணவர்கள் உதவி கோரி முதல்வருக்கு கடிதம்!

காஷ்மீரில் உள்ள என்ஐடி, என்ஐஎஃப்டி உள்ளிட்ட கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தங்களை பாதுகாப்பாக மீட்கக் கோரி 17 தமிழக மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதில் அளிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்தியா அழித்தது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர்-க்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளது. வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு, உதாம்பூர், ஜெய்சல்மர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதனை எஸ்400 சுதர்சன் சக்ரா கொண்டு இந்தியா வெற்றிகரமான முறியடித்தது. பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மத்திய பாதுகாப்புப் படை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தான் மீது பதில் தாக்குதலை தொடங்கியது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் மீது இந்திய கப்பல் படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகப்பெரிய சேதங்களை விளைவிக்கும். ஏனென்றால் பாகிஸ்தானின் கடல்வழி வணிகம் கராச்சி துறைமுகம் மூலமாகவே நடத்தப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையில் அறிவிக்கப்படாத போர் தொடங்கி நடைபெற்று வருவதாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் தொடரும் என்றும், இந்தியா கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக காஷ்மீரில் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீரில் உள்ள என்ஐடி, என்ஐஎஃப்டி உள்ளிட்ட கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்கள் 17 பேர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், தங்களை பாதுகாப்பாக மீட்கக் கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.