மே.8 – 9 இடைப்பட்ட இரவுநேரத்தில் இந்தியாவின் மேற்கு எல்லைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாகிஸ்தான் ராணுவம் மே 8-9 இடைப்பட்ட இரவில் இந்தியாவின் மேற்கு எல்லைகளை ஒட்டியப் பகுதிகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டது. வேறு சில ஆயுதங்களையும் பயன்படுத்தியது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகேயும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டது.
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டதோடு, எல்லையில் நடந்த பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டன. தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் இந்திய ராணுவம் உறுதியுடன் உள்ளது. அனைத்து தீய சக்திகளுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளது.