இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து, மற்ற போட்டிகள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இன்று அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன், “ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
“நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் தொடர்வது நல்லதல்ல” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். எனவே, போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பிசிசிஐ நாட்டுடன் நிற்க விரும்புகிறது, இதனால் உடனடியாக ஐபிஎல் 2025 ஐ நிறுத்தி வைக்கிறது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. போட்டிகள் மீண்டும் எப்போது நடக்கும் என்பது குறித்து விரைவில் விரிவான தகவல் வெளியிடப்படும்” என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் வீரர்கள் தற்போது தர்மசாலாவிலிருந்து சாலை வழியாக புதுடெல்லி செல்கின்றனர். கொல்கத்தாவில் நடைபெற இருந்த இறுதிப் போட்டி உட்பட பன்னிரண்டு லீக் போட்டிகள் மற்றும் நான்கு நாக் அவுட் போட்டிகள் நடைபெற வேண்டிய நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மற்றும் ஸ்ரீநகர், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, கபுர்தலா, ஆதம்பூர் மற்றும் பதிண்டா, சண்டிகர், ராஜஸ்தானில் உள்ள நல், பலோடி மற்றும் உத்தர்லாய், குஜராத்தின் பூஜ் ஆகிய 15 நகரங்களை புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்தது. இந்த நகரங்களை நோக்கி ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. எனினும் அந்த முயற்சிகள் இந்திய பாதுகாப்பு படைகளால் முறியடிக்கப்பட்டன.