தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது எங்கள் வேலை கிடையாது என்று கூறியுள்ளது. மட்டுமல்லாமல், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல என்றும் கூறியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது. இந்நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுவை தாக்கல் செய்த பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மணி என்பர் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதிகள், “நீங்கள் யார்? தேசிய கல்விக் கொள்கை பற்றி உங்களுக்கு என்ன கவலை?” என்று கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த மணி, “நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். தற்போது டெல்லியில் செட்டில் ஆகிவிட்டேன். ஆனால் தமிழ்நாட்டின் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படாததால் என்னால் இந்தியை கற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.
இதற்கு நீதிபதிகள், “அப்போ கத்துக்க முடியலனா என்ன? இப்போ டெல்லியில் கத்துக்கோங்க” என்று கூறி, “தேசியக் கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லையா என்பது ஒரு சிக்கலான பிரச்சனை. அரசியலமைப்பின் 32-வது பிரிவு மூலம், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான உத்தரவுகளை மட்டுமே எங்களால் பிறப்பிக்க முடியும். தேசிய கல்விக் கொள்கை போன்ற ஒரு கொள்கையை நேரடியாக ஏற்றுக்கொள்ளுமாறு எங்களால் கட்டாயப்படுத்த முடியாது. இருந்தாலும் இந்த விஷயத்தில் மாநிலத்தின் நடவடிக்கைகள், அல்லது செயலற்ற தன்மை மக்களின் ஏதேனும் அடிப்படை உரிமையை மீறினால் அதில் நாங்கள் தலையீடு செய்யலாம். தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ரிட் மனுவில் உள்ள பிரச்சனையை நாங்கள் ஆராய விரும்பவில்லை. மனுதாரரின் மனுவுக்கும் அவர் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தமிழ்நாடு மாநிலத்தை சார்ந்தவராக இருக்கலாம், ஆனால் புது டெல்லியில் வசிக்கிறார் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறியிருக்கின்றனர்.