ஆர்டிஇ திட்டத்தில் நிலுவை ரூ.617 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்: அன்பில் மகேஸ்!

ஆர்டிஇ திட்டத்தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ.617 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:-

‘நான் முதல்வன்’ திட்டம் மட்டுமின்றி ‘உயர்வுக்குப் படி’ திட்டம் மூலமும் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. தற்போது அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுதவிர தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறோம். ‘கிராமப்புற பகுதி மாணவர்களுக்கு திறன்’ எனும் திட்டம் மூலம் இதில் மேலும் கவனம் செலுத்தப்படும். முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தை இன்னும் அதிகப்படுத்த இருக்கிறோம்.

பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களை வீடுகளுக்கே தேடிச்சென்று அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பணிகளை செய்துவருகிறோம். தேர்வை எழுதாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு சிறந்த வாய்ப்பாகும். அதனைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதேபோல், 10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மிகவும் விரிவாக பாடத்திட்டங்கள் இடம்பெறாமல், தேவைப்படும் அளவுக்கு பாடங்களை இடம்பெறச் செய்துள்ளோம். இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்ல பயனளிக்கும். மேலும், பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட கணினி சார்ந்த பாடங்களைக் கொண்டுவருவதற்கும் ஆலோசித்து வருகிறோம்.

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் பேருக்கு அரசு நிதியுதவியுடன் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு வழங்கவில்லை. அதன்படி, ரூ.617 கோடி நிலுவை இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் என்ன பதில் தருகிறார்களோ, அதற்கேற்ப ஆர்டிஇ மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகும்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு தோல்வி அடைந்து மீண்டும் படித்தால் என்ன? என்று கேட்பது வருத்தமாக இருக்கிறது. நமது மாநிலத்தில் இடைநிற்றலை பூஜ்ஜியமாக மாற்றியுள்ளோம். மேலும், ஃபில்டர் செய்வது இடைநிற்றலில்தான் போய் நிற்கும். தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.