‘மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் மே 15ல் நடைபெறும்’ என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது விடியா திமுக அரசு. இதற்கெல்லாம் விடிவுகாலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
கழக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உயிர் காக்கும் முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் பரிசோதனை செய்வதற்குப் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. அதே போல், இருதயம், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளில் போதிய மருத்துவர்கள் இதுநாள் வரையிலும் நியமனம் செய்யப்படவில்லை. மேலும், நோயை குணப்படுத்துவதற்கான மருந்து, மாத்திரைகளும் தேவையான அளவிற்கு வழங்கப்படுவதில்லை. இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்களும் இல்லை. நோயாளிகளுக்கான படுக்கைகள் முறையாக பராமரிக்கப்படாமல் சீர்கேடு அடைந்துள்ளது. இவைகளின் காரணமாக, இம்மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி அவதியுறுகின்றனர்.
சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லை. மகப்பேறு பிரிவில் போதிய படுக்கை வசதிகளும் இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் பெருத்த துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
சிதம்பரம் நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அருகிலேயே கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளால் நகரம் முழுவதும் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் சாலைகளில் பயணம் செய்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்.
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகுதலை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரினை காக்கும் பொருட்டும், கழக ஆட்சியில் 2019-2020ஆம் நிதி ஆண்டில் தடுப்பணை கட்டுவதற்காக முதல்கட்டமாக நில அளவை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், விடியா திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனை மற்றும் சிதம்பரம் நகராட்சி ஆகியவற்றில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமாக இருந்து வருவதோடு, கழக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்துள்ள விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 15.5.2025 -வியாழக் கிழமை காலை 10 மணியளவில், சிதம்பரம் நகரம், காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் V.P.B. பரமசிவம் தலைமையிலும்; கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் K.A. பாண்டியன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.