தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

பெ.மணியரசன் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

தனது கருத்தியல் வலிமையாலும், அளப்பெரும் அறிவுக்கூர்மையாலும், எவரும் வெல்ல முடியாத தர்க்க ஆற்றலாலும், பன்னெடுங்காலமாகப் பெற்ற படிப்பறிவாலும், பட்டறிவாலும் தமிழ்த்தேசிய இனத்தின் அறிவுப்பெட்டகமாகத் திகழும் ஒப்பாரும் மிக்காருமில்லா பேராளுமை!

திராவிடத் திரிபுவாதங்களையும், வரலாற்றுப்புனைவுகளையும் ஒருசேர அடித்து நொறுக்கி, மண்ணுக்கும், மக்களுக்குமான தமிழ்த்தேசியம் எனும் மகத்தான கருத்தியலை ஆணித்தரமாக எடுத்துரைத்து, எதிரிகளைச் சிதறடிக்கும் வல்லமை கொண்டு, சமகாலத்தில் நம்மோடு வாழும் பெருமைகள் பலவற்றுக்குரிய பெருந்தமிழர்!

வீரத்தையும், மானத்தையும் இரு கண்களாகக் கொண்டு, அறம் போற்றி வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் சமரசமற்ற போர் மரபின் தொடர்ச்சியாக வழிவழியே வந்த தமிழ்த்தேசிய முன்னவர்களின் நீட்சியாய் திகழும் எங்களின் போற்றுதற்குரிய முன்னத்தி ஏர்!

தமிழ்த்தேசியம் எனும் ஒப்பற்ற கருத்தியலை நெஞ்சில் சுமந்து, அதனை வென்றுகாட்ட பெரும் காலம் செலவு செய்து, சிறிதும் தடுமாற்றம் அடையாது, துளியும் தடம் பிறழாது, வீரியம் குறையா வேகத்தோடு தொடர்ந்து பயணிக்கும் எங்களின் கொள்கை வழிகாட்டி!

தமிழ்த்தேசியத்தை தமிழர் நிலமெங்கும் ஆழ விதைத்து, அத்தத்துவத்தின் தந்தையாக விளங்கும் அறிவுப்பேராசான்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்! எங்கள் அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது. தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்!

தமிழ்த்தேசியம் எனும் இலட்சியக்கனவு ஈடேற, அப்பா பெ.மணியரசன் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ்ந்து, தமிழினத்திற்குப் பெருந்தொண்டாற்றி, அருஞ்சேவை புரிய பேரன்புகொண்டு வாழ்த்துவதில் பெரிதும் உளம் மகிழ்கிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.