இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்துவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று (மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர். விமானப் படையின் பதில் நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியதாவது:-
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை நோக்கி தனது துருப்புக்களை நகர்த்தி வருகிறது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கம் கொண்ட தாக்குதலை குறிக்கிறது. இந்திய ஆயுதப்படைகள் உச்சபட்ச தயார் நிலையில் உள்ளன. அனைத்து விரோத நடவடிக்கைகளும் திறம்பட எதிர்கொள்ளப்பட்டு, விகிதாச்சார ரீதியாக பதிலளிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் அதேநேரத்தில், பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்திய ஆயுதப்படைகள் மீண்டும் வலியுறுத்தின. விரைவான மற்றும் துல்லியமான பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் அடையாளம் காணப்பட்ட ராணுவ இலக்குகளில் மட்டுமே துல்லிய தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தான் தொடர்ந்து தீங்கிழைக்கும் தவறான தகவல் பிரச்சாரத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளது. இந்தியாவின் S-400 அமைப்பை அழித்ததாகவும், சூரத்கர் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை அழித்ததாகவும் அது கூறுகிறது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான கூற்றுக்களை இந்தியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது.
லாகூரில் இருந்து புறப்படும் சிவிலியன் விமானங்களையும், சர்வதேச விமான வழித்தடங்களையும் பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தியது கவலைக்குரிய விஷயம். இத்தகைய தந்திரோபாயங்கள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பை மிகுந்த பொறுமையுடன் செயல்பட கட்டாயப்படுத்தியது. அதே நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை ராணுவம் உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாபின் அமிர்தசரஸில், குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், பைக்கர் யிஹா III காமிகேஸ் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியதாகவும், இன்று அதிகாலை 5 மணிக்கு ராணுவ வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பார்மரில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளின் துண்டுகள் மற்றும் சிதைவுகள் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டன.
இதற்கிடையில், இன்று அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள நான்கு விமானப்படை தளங்கள் இந்தியத் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டுப்பாட்டுக் கோட்டில் பல இடங்களில் இடைவிடாத துப்பாக்கிச் சூடு இன்னும் நடந்து வருகிறது.