தமிழக மாணவர்களை நிலைமை சரியானதும் அழைத்துவர நடவடிக்கை: தமிழக அரசு!

ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜம்மு-காஷ்மீர், பகல்காம், பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.

உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார்.

அதன்படி, உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300, 9289516712 (வாட்ஸ் அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் படித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த 52 மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்துவர முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதற்கிணங்க முதல்வர் உத்தரவின்பேரில், அமைச்சர் எஸ்.எம்.நாசர், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் ஆகியோர் அம்மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து பேசி, தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தற்போது விமான சேவைகள் முடக்கம் மற்றும் சாலை வழியாக பாதுகாப்பாக அழைத்துவருவதற்கான சூழ்நிலை இல்லாததால் நிலைமை சீரானதும் மாணவர்களை அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அயலக தமிழர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜம்மு- காஷ்மீரில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ப்பு, ஆடை வடிவமைப்பு, தேசிய தொழில்நுட்ப கழகம் உள்ளிட்ட உயர் கல்வி பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 52 மாணவ, மாணவிகள் மற்றும் கல்வி சுற்றுலா சென்ற 4 மாணவர்களையும் சாலை வழியாக அழைத்து வருவதற்கு பாதுகாப்பற்ற நிலைமை உள்ளது.

அவர்களும் சாலை வழியாக வருவதற்கு விருப்பம் இல்லை என்றும் விமான சேவை மீண்டும் தொடங்கியதும் தமிழகம் வருவதாகவும் பெரும்பான்மையான மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அரசால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, நிலைமை சீரடைந்து பாதுகாப்பான சூழல் உருவான உடன் மாணவர்கள் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள். கல்விச் சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மட்டும் சாலை வழியாக டெல்லி புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேர்ந்தபின், இன்று அதிகாலை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள். இந்தியாவின் மேற்கு எல்லைப்பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு தேவையான தகவல்கள், உதவி, மீட்பு மற்றும் தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உதவிமையம் செயல்பட்டு வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழக அரசின் உதவி எண்களான இந்தியாவுக்குள்- 1800 309 3793, வெளிநாடு +91 80 6900 9900, தொடர்புக்கு + 91 80 6900 9901 ஆகிய எண்களை தெடர்பு கொள்ளலாம்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது காஷ்மீரில் பயிலும் தமிழக மாணவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தமிழக மாணவர்கள் கண்டிப்பாக, நிச்சயமாக மீட்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.