நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!

மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து இன்று (10-05-2025) அறிவித்துள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சி, தமிழக அரசியல் களத்தில் தனித்துவமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது. 2009-ல் இயக்கமாகத் தொடங்கப்பட்ட இக்கட்சி, 2010-ல் சீமான் தலைமையில் முறைப்படி அரசியல் கட்சியாக உருவெடுத்தது. தனித் தமிழ் ஈழம் அமைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இக்கட்சி, 2016 முதல் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்தது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் 1.07% வாக்குகளைப் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு 3.9% வாக்குகளைப் பெற்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதே சின்னத்தில் 6.6% வாக்குகளைப் பெற்று, திராவிடக் கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்து கவனம் ஈர்த்தது.
2024 மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. இத்தேர்தலில் 8.22% வாக்குகளைப் பெற்று, தமிழகத்தில் மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் 2025 ஜனவரி 11-ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பயணத்தில் இரட்டை மெழுகுவர்த்தி (2016), கரும்பு விவசாயி (2019, 2021), மற்றும் மைக் (2024) ஆகிய சின்னங்களில் போட்டியிட்டுள்ளது. 2024 தேர்தலுக்கு முன், கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, கட்சி டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தாமதமாக விண்ணப்பித்ததே இதற்குக் காரணம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு, கட்சி தேர்தலை எதிர்கொண்டது.

2024 மக்களவைத் தேர்தலில் 8.22% வாக்குகளைப் பெற்றதன் மூலம், நாம் தமிழர் கட்சி தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் கீழ் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் அக்கட்சிக்கு ஏர் கலப்பை உடன் கூடிய விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து உள்ளது.