எடப்பாடி பழனிசாமியுடன் நயினார், எல்.முருகன் சந்திப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று சென்னை பசுமைச் வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசி உள்ளனர்.

2026 சட்டசபை தேர்தலையொட்டி, பாஜக – அதிமுக கூட்டணி அமைத்துள்ளன. முன்பு பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக கூறி வந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி சென்னையில் அதிமுக – பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். முரண்டு பிடித்து வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென பாஜக உடன் கைகோர்த்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி வைத்துள்ளதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தங்களை மிரட்டி பாஜக கூட்டணி வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர்கள் நேற்று சந்தித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று சென்னை பசுமைச் வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி உள்ளனர். அப்போது நாளை (திங்கட்கிழமை) எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அவருக்கு இருவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மேலும், தேர்தல் கூட்டணி மற்றும் களப்பணிகள் தொடர்பாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்தும் இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பேசிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் மே 12ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை ஒட்டி, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக முன்னணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளான திருப்பதி நாராயணன், வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.