தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசு மலரும் போதுதான் கச்சத்தீவை மீட்டெடுக்க முடியும் என்றும் சீமான் கூறியுள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போது, கச்சத்தீவு விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று தமிழக கட்சிகளால் அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப தமிழக சரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் பிரதமர் மோடி கச்சத்தீவு தொடர்பாக எந்த கருத்தையும் பேசவில்லை. இது தமிழக மீனவர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில் தஞ்சாவூரில் தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டரசு கோட்பாடு சிறப்பு மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது சீமான் பேசியதாவது:-
மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கினார்கள். ஆனால் மத்திய கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என்று மாற்றிவிட்டார்கள். மக்கள் ஆட்சியை தன் மக்கள் ஆட்சியாக மாற்றிவிட்டார்கள். மாநில சுயாட்சி என்று பேசிக் கொண்டே தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டனர். தமிழர்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் எந்தவொரு உரிமையையும் பெற்று கொடுக்கவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள திமுகவால் கச்சத்தீவை மீட்க முடியாது. தமிழ் தேசியத்தால் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியும். தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசு உருவாகும் போது, கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்களின் வாழ்வாரத்தை காப்போம். அப்படி முடியவில்லை என்றால், எங்களை பிரித்துவிடு என்று சொல்லுவோம்.
தமிழ்நாட்டில் பேசப்பட்டு வரும் சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் தான். மாநில சுயாட்சி என்று கூறி கொண்டே, அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டனர். இந்தியா இறையாண்மை கொண்ட நாடாக இருக்க வேண்டுமென்றால், அந்தந்த மாநிலங்களுக்கு உரிமைகளை கொடுக்க வேண்டும். அதுவே கூட்டாட்சி தத்துவம். இவ்வாறு அவர் பேசினார்.